இத்தாலி பியல்லாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026
முள்ளிவாய்க்கால் மே 18 இன், 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2026 இன்று, இத்தாலி, பியல்லா மாநகரில் “முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்” என்ற பாடலுடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.வல்திலானா நகரசபையின் அனுசரணையுடன் தமிழின அழிப்பு நினைவாக நாட்டபட்ட மரம், நினைவுக்கல் இடத்தில் (Piazza XXV Aprile, Ponzone, Valdilana ) 18.00 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.தமிழீழத்தேசியக் கொடியினை கப்டன் ரூபனின் சகோதரர் ஏற்றியதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. பிரதான ஈகைச்சுடரேற்றி வைத்து சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன நடைபெற்றது.தொடர்ந்து மழைக்கு மத்தியிலும் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் இத்தாலி மொழியில் தமிழின அழிப்பில் எமது இனம் அனுபவித்த வலிகளையும், எமக்கான நீதிகோரலையும் வலியுறுத்திய ஆக்கங்கள் இடம் பெற்றன.அத்துடன் எமது மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம்தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடல் இசைக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

























